தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2022

சங்கிலி

 

 சில நாட்களுக்கு முன் ஒரு நாள் காலை திடீரென்று தலை சுற்ற ஆரம்பித்தது.(தலைக்கே தலை சுற்றலா என்று பதிவு நண்பர்கள் கேட்பது காதில் விழுகிறது!) அப்படியே நாற்காலியில் அமர்ந்து விட்டேன்.

டாக்டர் வந்து பார்த்தார்.பரிசோதனைகள் செய்தார்.கடைசியில் சொன்னார் “உங்களுக்கு வெர்டிகோ”  என்று!

 

ஏனக்குத் தெரிந்து வெர்டிகோ என்றால் உயரங்களின் பயம் (fear of heights).இங்கு நான் ஒரு ஸ்டூலில் கூட ஏறவில்லையே!இது வேறு வெர்டிகோ போலும்!

 

நான் பல ஆண்டுகளுக்குமுன் ஒரு ஹிட்ச்காக் படம் பார்த்திருக்கிறேன்.

படத்தின் பெயர் வெர்டிகோ.

அதில் நாயகனுக்கு உயரத்தைக் கண்டால் பயம்.

அதைப் பயன்படுத்தி ஒரு கொலை நடக்கிறது

இந்தப் படத்தைத் தழுவித் தமிழில் ஒரு படம் எடுத்தார்கள்.

பெயர்”கலங்கரை விளக்கம்”.

 

கலங்கரை விளக்கம் என்பது கடற்கரையில்,கடலில் செல்லும்

கலங்களுக்கு வழிகாட்டுவதற்காக அமைக்கப் படுவது.

 

சோழர் காலத்திலேயே கடல் வாணிபம்,கடற்படை எல்லாம் இருந்த காரணத்தினால்,கலங்கரை விளக்கமும் இருந்தது.கோடிக்கரையில் இருக்கும் கலங்கரை விளக்கமே சாட்சி.

 

புராணகாலத்திலேயே வான் ஊர்தியும்இருந்திருக்கிறது.

இராமாயணத்தில் புஷ்பக விமானம் பற்றிச் சொல்லப்படுகிறது

மகாபாரத காலத்தில் போரில் பயங்கரமான அஸ்திரங்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.நாகாஸ்திரம்,அக்னியாஸ்திரம்என்று பலப் பல.அனைத்தையும் விட சக்தி வாய்ந்தது பிரம்மாஸ்திரம்.அதுதான் இன்றைய அணுகுண்டாக இருக்க வேண்டும்.

 

அணுகுண்டு என்றதும் தீபாவளி நினைவு வருகிறது.சிறுவனாக இருந்தகாலத்தில் அணுகுண்டு வெடித்து அந்தப் பேரொலியைக் கேட்பதில் பெருமகிழ்ச்சி.

ஆனால் இப்போதோ,காதைப் பொத்திக் கொண்டு உட்காரத் தோன்றுகிறது.

 

ஒரு குடும்பத்தலைவருக்கு தீபாவளி என்றால் கலக்கம்தான்,செலவுகளை எண்ணி.

அனைவருக்கும் புதுத்துணி,இனிப்பு கார வகைகள் ,பட்டாசு என்று எத்தனை.

தலை சுற்ற ஆரம்பித்து விடும்.

அது நிச்சயம் வெர்டிகோ இல்லை!

திங்கள், ஆகஸ்ட் 22, 2022

கண்ணனின் குடில்

 

கண்ணன் வந்தான்.

வந்தவன் இருந்தானா?

இல்லையேல் சென்று நாம் மீண்டும் அடுத்த ஆண்டு அழைக்கும்போதுதான் வருவானா?

எப்படி அழைத்தோம்…….

வீடு பெருக்கித் துடைத்துச் சுத்தம் செய்தோம்

தோரணம் கட்டினோம்

கோலம் போட்டோம்.

சின்னச் சின்ன கால்கள் வரைந்தோம்.

இவையெல்லாம் வெறும் சடங்குகளாகச் செய்தோம்.

அவன் எங்கு தங்க வேண்டுமோ அந்த இடத்தைச் சுத்தம் செய்தோமா?

அழுக்காறு,அவா,வெகுளி போன்ற எதிர்மறைக் குப்பை எண்ணங்களால் நிரம்பி வழியும் நம் மனத்தைச் சுத்தம் செய்ய வேண்டாமா?

சுத்தமாக இருந்தால்தானே அவன் வந்து அமர முடியும்?

அவன் நிரந்தரமாக இருக்க முடியும்?

செய்வோமா?

அவனிடம் நம்மை ஒப்படைப்போம்.

சமீபத்தில் கேட்ட குட்டிக் கதையொன்று…

கண்ணன் அஸ்தினாபுரத்துக்கு வருகிறான்.

அவன் தேர் நெருங்கியதும் பீஷ்மர் வந்து “கண்ணா!என் வீட்டுக்கு வரவேண்டும்” என் அழைக்கிறார்.

“இதுதான் உங்கள் வீடா?பின்னர் வருகிறேன்.”கண்ணன் அகன்றான்.

சிறிது தூரத்தில் துரோணர் வந்தார்.

“கண்ணா!என் வீட்டுக்கு வர வேண்டும்”

“ஓ! இது உங்கள் வீடா? பின்னர் வருகிறேன்.”

சிறிது தூரத்தில் விதுரர் வந்தார்

“கண்ணா!உன் வீட்டுக்கு வரவேண்டும்”

‘ ஓ!? என் வீடல்லவா?கட்டாயம் வரத்தான் வேண்டும்”

அவன் விதுரர் வீட்டிற்குச் சென்றான்.

இதற்கும் மேல் விளக்கம் தேவையா?!

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

 

 

 

சனி, ஆகஸ்ட் 20, 2022

திருச்சிற்றம்பலம்

 தொலைபேசி மணி ஒலித்தது.

எடுத்தேன்

முகமன் கூறினேன்"ஓம் நமச்சிவாய"

ஆம்.நான் போனில் ஹலோ சொல்வதில்லை.ஆனால் இப்போதெல்லாம்  தெரியாத எண்களிலிருந்து போன் வந்தால் ஹலோ சொல்லி விடுகிறேன்.

என் நண்பர் ஒருவர் வீட்டில் என்னை என் பெயர் சொல்லிக் குறிப்பிடுவதே இல்லை.ஓம் நமச்சிவாய என்றே குறிப்பிடத் தொடங்கி விட்டனர்.


இன்னொரு நண்பர் இருக்கிறார்.அவர் போனை எடுத்ததும்"திருச்சிற்றம்பலம்" என்று சொல்வார்.


என்ன சொன்னால்தான் என்ன?எல்லாம் என்னப்பன் தென்னாடுடைய சிவன் நாமம்தானே!


திருச்சிற்றம்பலம் என்றதும் நினைவுக்கு வருகிறார் திரு.ஜெகசிற்பியன்.

விகடன் சரித்திர நாவல் போட்டியில் அவரது "திருச்சிற்றம்பலம்" என்னும் நாவல் முதல் பரிசு பெற்றது.

ஆலவாய் அழகன்,நந்திவர்மன் காதலி போன்ற சரித்திரக்கதைகளையும்,பல சமூக நாவல்களையும்,சிறுகதைகளையும் எழுதியவர்.விகடனில் சில முத்திரைக்கதைகளையும் எழுதியவர்.


உங்களில் எத்தனை பேர் திருச்சிற்றம்பலக் கவிராயரைத் தெரியும்?

தொ.மு.சிதம்பர  ரகுநாதன் என்பது அவரது இயற் பெயர்.கம்யூனிச இயக்கத்தில் பற்றுக் கொண்டவர்..

எனக்கு என் கல்லூரி நாட்களில் அவர் கவிதைகள் மிகவும் பிடிக்கும்.

கோழை மனத் தாமசஙகள் ஏதுமின்றி

தாரணியில் சோசலிசம் நாமைமக்க எண்ணுவமின்னாள்.

என்று பாடியவர்.

சீன ஆக்கிரமிப்பின்போது அவஎ எழுதிய கவிதை மறக்க முடியாதது

"பல்லாயிரம் அடி மேல் பனி மலையின் உச்சியிலே

கொல்லாமல் கொல்லுகின்ற கொடுங்குளிரின் மத்தியிலே

பொல்லாத சீனரோடு போர் புரியும் நம் வீரம்

சொல்லால் வசப்படுமோ சொல் பொருளும் ஒத்திடுமோ"

பின்னாளில் என்ன ஆனார் எனத் தெரியவில்லை

ஒரு கேள்வி

"திருச்சிற்றம்பலம்" என்று ஒரு படம் வந்திருக்கிறதாமே?

பக்திப் படமோ?











வெள்ளி, ஆகஸ்ட் 19, 2022

கண்ணன் என்னும் ஆனந்தம்

 

கிருஷ்ணன் என்றாலே ஆனந்தம்தான்.

அது அனுபவித்தால்தான் புரியும்.

கிருஷ்ணா விழிப்புணர்வின்,கிருஷ்ணானுபவத்தின் ஆனந்தமே அலாதி

1993 என நினைவு.

மதுராவில் வங்கி ஆய்வு தொடர்பாக ஒரு மாதம் இருக்க நேர்ந்தது.

சில நாட்களிலேயே நான் என்னுள் ஒரு மாற்றத்தை உணர்ந்தேன்.

சாதாரணமாகப் பல நேரங்களில்.தனியாக இருக்கும்போது கூட எதன்/எவர் மீதாவது கோபம்/வெறுப்பு ஆகியவை தோன்றும்.என்ன வாழ்க்கை என்ற சலிப்பு ஏற்படும்.ஆனால் அத்தகைய எதிர்மறை எண்ணங்கள் குறைந்து மனம் ஒரு வித ஆனந்ததில் லயித்தது.இங்கு மகிழ்ச்சி என்று நான் சொல்லவில்லை.அது ஏனோ ஆனந்தம் என்பதே பொருத்தமாக இருக்கிறது.யாரைப் பார்த்தாலும் ஒரு நட்புணர்வு,நல்லெண்ணமே மேலிட்டது.

இதன் விளைவுதான் கிருஷ்ணன் பழகிய பல ஊர்களைப் பார்க்கும் ஆவல் மேலோங்கியது.ஒரு ஞாயிறன்று அதி காலை புறப்பட்டேன்.

 

கோகுல்,கோவர்த்தன், நந்தகாவ், பல்தேவ்,பர்சானா(ராதாவின் பிறப்பிடம்) என்று கண்ணனுடன் தொடர்புடைய பல ஊர்களுக்குச்  சென்று முழுமையான கிருஷ்ணானுபவத்தில் அமிழ்ந்தேன்.

 காலை உணவு எதுவும் சாப்பிடாமல் இருந்தாலும்,கண்ணனே என்னை ஆட்கொண்டிருந்ததால் பசியை உணரவில்லை

 

பிற்பகல் 3 மணிக்கு மதுரா திரும்பினேன்.அப்போதுதான் கண்ணன் என்னைப் பசியை உணர வைத்தான்.கோவில் அருகிலேயே ஒரு உணவகம். தரைமீது அமர்ந்து ஒரு பலகை மீது தட்டு வைத்து சுவையான சாப்பாடு.வயிறு புடைக்க உண்டேன்.

கிருஷ்ணானுபவத்தின் மற்றொரு நிகழ்வு எனது “பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்” (http://chennaipithan.blogspot.com/2013/03/blog-post_19.html )என்ற பதிவில்.

 

முடிக்கும்முன்…..

அலமாரியைத் திறந்து சட்டை எடுக்கும்போது,மூலையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த சட்டையைப் பார்த்தேன்.எவ்வளவு பிரியமுடன் வாங்கிய சட்டை?எத்தனை முறை விருப்பமாக அணிந்த சட்டை?இப்போது மூலையில்….

 

இதைத்தான் கண்ணன் சொல்கிறான்….

”வாஸாம்ஸீ ஜீர்ணானி யதா விஹாய

          நவாநி கிருஹ்ணாதி நரோபராணி

ததா சரீராணி விஹாய ஜீர்ணானி

           அந்யாநி ஸம்யாதி நவானி தேஹீ”

 

எப்படி மனிதன் நைந்துபோன பழைய உடைகளை நீத்து விட்டு,புதிய உடைகளை அணிகிறானோ,அவ்வாறே ஆத்மா நைந்துபோன பழைய உடல்களை நீத்து விட்டுப் புதிய உடைகளை அணிகிறது

ஆத்மா அழிவற்றது.

கண்ணனை வணங்குகிறேன்.

வியாழன், ஆகஸ்ட் 18, 2022

வாழ்க்கை ஒரு விளையாட்டு..3.---ஹாக்கி

 

நானும் ஹாக்கியும் சம்பந்தப்பட்ட. மற்றுமொரு நிகழ்ச்சி.

கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும்,பல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.அதற்காக நான்கைந்து குழுக்கள் அமைக்கப்படும்.அந்த ஆண்டு ஒரு குழுவின் தலைவனாக நான் நியமிக்கப்பட்டேன்.(எனது ஆரஞ்சுக் குழுதான் அந்த ஆண்டு சாம்பியன் குழுவாக வந்தது.)

போட்டிகளில் ஹாக்கியில் என் தலைமையில் என் குழு ஆடியது எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினோம்.மிகவும் கடுமையான போட்டி.ஆட்டத்தில் என் இடம்,வலது கடைசி(right-out,right extreme).நான் பாஸ் செய்த பந்தை வாங்கி,என் அணி ஆட்டக்காரர் ஒரு கோல் போட்டார். எதிர் அணியினரும் ஒரு கோல் போட்டனர்..ஆட்டம் மேலும் கடுமையானது.நான் என் முழுத்திறமையையும் காட்டி ஆடினேன்.நானே பந்தை எடுத்துச் சென்று ஒரு கோல் போட்டேன்.எதிர் அணியினரால் எங்கள் பாதுகாப்பை மீறி கோல் போட முடியவில்லை

 

.ஆட்டத்தில் சிறிது வன்முறை தலையெடுத்தது.அப்போது ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த மாணவர்கள் நடுவிலிருந்து  உரத்த குரல் எழுந்தது” கேப்டனை அடிடா”.என்று(உண்மையில் வந்த வார்த்தைகள் வேறு!)சிறிது நேரத்தில் எதிர் அணி ஆட்டக்காரர் ஒருவர் என்னுடன் மோதும் போது,மட்டையால் என் காலில் அடித்தார். அதைப் பொருட்படுத்தாமல் நான் தொடர்ந்து வேகமாக ஆடினேன். வெளியிலிருந்து என் வகுப்புத்தோழனின் குரல் வந்தது. ”சந்துரு,உன் காலைப் பார்” குனிந்து பார்த்தேன்.குருதி வழிந்து கொண்டிருந்தது.ஆட்டம் முடிய சில மணித்துளிகளே மீதம் இருந்ததால்,கைக்குட்டையால் ஒரு கட்டுப் போட்டு விட்டுத் தொடர்ந்து ஆடினேன்.இறுதியில் எங்கள் அணி வென்றது.

 

எங்கள் ஆட்டம் பலராலும் பாராட்டப் பட்டது

 

முடிவில் வெற்றி பெற்ற ஆரஞ்சுக்குழுவின் தலைவன் என்ற முறையில் குழுவுக்கானபரிசைப் பெற்றுக் கொண்ட நான்.ஹாக்கி வெற்றிக்கான பரிசை நன்கு விளையாடிய வேறொரு  மாணவரைப் பெற்றுக்கொள்ளச் சொல்லி அனுப்பி அதிலும் நல்ல பெயர் பெற்றேன்!

 

இந்த விஷயத்தில் தல தோனிக்கெல்லாம் நான் முன்னோடி,தெரியுமா?

 

டிஸ்கி: தம்பட்டம் இதோடு போதும் என நினைக்கிறேன்.அடுத்த பதிவில் வேறு ஏதாவது பேசுவோமா!

புதன், ஆகஸ்ட் 17, 2022

வாழ்க்கை ஒரு விளையாட்டு..2

 

சந்துரு!ஏலேய்”

திரும்பிப் பார்த்தேன்

என் வகுப்புத்தோழன் சிதம்பரம்தான் அழைத்தது

“ஒன்னை ஹாக்கி அகஸ்டின் அண்ணாச்சி கூப்பிடறாரு. மைதானத்துல இருக்காரு”

அகஸ்டின் முன்னாள் மாணவன்.ஹாக்கிவீரன்.இப்போது கோவில்பட்டி’சி’அணிக்காக ஆடுகிறார்.அணித்தலைவர்.கோல் கீப்பர்.

என்னை எதற்குக் கூப்பிடுகிறார்?

யோசித்தபடியே போனேன்.

அவரை நெருங்கி” கூப்பிட்டீங்களாமே?” என்றேன்.

அவர் கேட்டார்”நீ எப்பவும் என்ன பொசிசன்ல ஆடுற?”

“ரைட் அவுட் அண்ணாச்சி”

”உம்.டோர்னமெண்ட்ல ஆடுவயா?”

ஒன்றும் புரியவில்லை.

அவரையே பார்த்தேன்

”வெள்ளிக்கிழமை நம்ம அணிக்கு மேச் இருக்கு.இன்னிக்குத் திங்கள்.ஊருக்குபோன செல்லப்பா இன்னும் வரலை.அவன் ரைட் அவுட்தான்.அவன் வரல்லேனா நீ ஆடணும்.முடியுமா?”

எனக்குஒருஇன்ப அதிர்ச்சி.

‘ஆடுறேன் அண்ணாச்சி”

“லிஸ்ட் எல்லாம் பாத்தயில்ல.யாரோட ஆடறோம் தெரியுமாலே?”

”பாத்தேன்.ஆனா ஞாபகம் இல்ல.”

“கோல்டன் ராக்.தயாரா இரு”.

என் வயிற்றைக் கலக்கியது “கோல்டன் ராக்”

காட்டரை எதிர்த்தா?

வீட்டுக்கு வேகமாகத் திரும்பி நேராக டாய்லெட் போய்விட்டேன்.

அன்று இரவு சரியாகத் தூக்கம் வரவில்லை.

மறுநாள் முழுவதும் ஒரு கலக்கம்தான்

மாலை பயிற்சி ஆட்டம்.

பயத்துடன் ஆட ஆரம்பித்தாலும் கொஞ்ச நேரத்தில் ஆட்டத்துடன் ஒன்றி விட்டேன்.

லேசாக பயம் தெளிந்து விட்டது.

இவ்வாறாக மேலும் இரு நாட்கள் சென்றன.

வெள்ளியன்று காலை செல்லப்பா  வந்துவிட்டான் என்ற செய்தி கிடைத்தது.

கொஞ்சம் ஏமாற்றம்; கொஞ்சம் ஆறுதல்!

அன்று….

ஆட்டம் தொடங்கியது.

காட்டர் எப்போதும் எங்கள்D யிலேயே இருப்பது போல் தோன்றியது.

முடிவு பொன்மலை அணி வெற்றி….12-0

ஒரு பெருமூச்சு விட்டேன்.

நல்லவேளை நான் ஆடவில்லை

ஆனால் நான் ஆடியிருந்தால் முடிவு 12-0 என்று இருந்திருக்காது

……..

……….

……….

15-0 ஆகக் கூட இருந்திருக்கலாம்!

 

 

 

 

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2022

வாழ்க்கை ஒரு விளையாட்டு

                                                                              

அந்த வேதனை மறைவதற்கு இரண்டு நாட்களாயிற்று.

வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜம்தான்.

ஆனால் இப்படி ஒரு தோல்வியை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

என்ன ஆயிற்று.

ஒரு இறுதி ஆட்டத்தில் இப்படி ஒரு தோல்வி அடைவது ,அதுவும் ஒரு காலத்தில் அந்த விளையாட்டில் கொடிகட்டிப் பறந்த ஒரு நாடு,பல மறக்க முடியாத வீரர்களைத் தந்த நாடு, வெட்கப்பட வேண்டிய செய்தியே

பொதுநலவாய ஹாக்கி இறுதி ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் 7-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது 

கோவில்பட்டியில் ஹாக்கி பயின்றவன்,தயான்சந்தை நேரில் பார்த்தவன்,ஓரிரு வார்த்தை பேசியவன்,அவரது மட்டை மாயததைக் கண்டவன்  என்ற முறையில் எனது வலி மிக அதிகம்.

நான் சிறுவனாக இருந்தபோது வானொலியில் கேட்ட ஒரு ஆட்டத்தின் நேர்முக வர்ணனையின் ஒரு பகுதி இன்னும் மறக்க முடியவில்லை.இந்தியா ,ஜப்பான் நடுகளுக்கிடையேயான போட்டி.இதோ அந்தப் பகுதி...ஆங்கிலத்தில்

“Gurudev to Deshmuk,Deshmuk to Gurudev,Gurudev to Dedhmuk,Deshmuk to Gurudev,Gurudev to Deshmuk,Deshmuk to Gurudev.........A Goal !

இந்தியா அன்று 11 கோல்கள் அடித்தது.

ஆனால் இன்றோ ,இந்தியா ஜப்பானிடத்தில் இருப்பது போல் தோன்றியது

கோவில்பட்டி குப்புசாமி நாயுடு நினைவு ஹாக்கிபோட்டியில் பல முறை. ஒரு அணியிடம் எதிர் அணி வாங்கிய பலத்த அடிகளைப் பார்த்திருக்கிறேன்.

கோவில்பட்டியிலேயே மூன்று அணிகள்--A,B,C  என்று. அதில் ஏஅணி சிறந்த அணி.மற்றும் லக்ஷ்மி மில்,பெரம்பூர் ரெயில்வேஸ், கோல்டன்ராக் ஆகிய சிறந்த அணிகள்.அப்போதெல்லாம் ரெயில்வே அணிகளில் பெரும்பாலும் சிறந்த ஆட்டககாரர்களாக விளங்கியவர்கள் ஆங்கிலோ இந்தியர்களே.

பெரம்பூரின் கார்,பொன்மலையின் காட்டர் நினைவில் நிற்பவர்கள்.

ஒரு முறை கோவில்பட்டி C  அணியில் ஆடுவதற்குக் கிடைத்த வாய்ப்பு பற்றி  அடுத்த  பதிவில்எழுதுகிறேன்.

..(இன்னும் வரும்)