தொடரும் தோழர்கள்

வெள்ளி, நவம்பர் 26, 2010

இறைத்தத்துவம்

அவன் அந்த ஆற்றங்கரைக் கோவில் மண்டபத்திலேயே தங்க ஆரம்பித்தான்.அவனது பெரும்பகுதி நேரம் தியானத்திலேயே கழிந்தது.பசிக்கும்போது ஊருக்குள் சென்று யாரிடமாவது உணவு கேட்டுச் சாப்பிடுவான்.அந்த ஊரில் யாரும் அவனுக்கு உணவிட மறுப்பதில்லை.அனைவருக்கும் அவனிடம் ஒரு மரியாதை இருந்தது.

ஒரு நாள் அவன் சென்று கொண்டிருக்கும் போது ஒருவன் கையில் கற்களுடன் எதையோ தேடுவது போல்நின்று கொண்டிருந்தான்.

அவனைப்பார்த்ததும் அந்த ஒருவன் சொன்னான்"சாமி,ஒரு நாயி எப்பப்பார்த்தாலும் என்னைக் கண்டா கொலச்சுக்கிட்டே இருக்கு.அந்த சமயத்தில அத அடிக்கக் கல்லத் தேடினா கல்லு கெடைக்க மாட்டேங்குது.இப்ப கல்ல எடுத்து வச்சுக்கிட்டு நாயத் தேடினா அதக்காணும்.அந்தக்காலப் பெரியவங்க சரியாத்தான் சொன்னாங்க"நாயக்கண்டாக் கல்லக்காணும்,கல்லக்கண்டா நாயக்காணும்"அப்படின்னு.

அவன் சிரித்தான்."இந்த மக்கள் உண்மையான பொருளை விட்டு விட்டு வேறு ஏதோ பொருளைக்கற்பித்துக்கொள்கிறார்களே"என்று நினைத்தான்.
பின் சொன்னான். "அதற்குப்பொருள் அப்படியல்ல.கல்லில் செய்யப்பட்ட ஒரு நாயின் சிலையில் நாயின் உருவத்தை ரசித்துப்பார்க்கும்போது கல் கண்ணுக்குத்தெரிவ்தில்லை.அது என்ன கல்,செங்கல்லா,கருங்கல்லா என்று ஆராயும்போது நாய் தெரிவதில்லை.அதுதான் பொருள்."

மற்றவன் சொன்னான்"இதெல்லாம் எங்களுக்கு என்ன சாமி தெரியும்?நீங்க சொன்னாத் தெரிஞ்சுக்கறோம்."

அவன் நினைத்தான்."இறைத்தத்துவமும் இது போலத்தானே.ஐந்து பூதங்களாகிய நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் இவற்றை வியந்து அவற்றில் லயிக்கும் போது இறைவன் மறைந்து விடுகிறான்.பஞ்ச பூதங்களுக்கும் காரணமான பரம்பொருளை நினைக்கும் போது அவை மறைந்து இறைவனே நிற்கிறான்.'

அவன் கோவில் மண்டபத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

"மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார் முதல் பூதமே.-(திருமூலர்)

(பொருள்:மரத்தால் செய்யப்பட்ட யானைச் சிற்பத்தைப் பார்க்கும்போது,மரத்தைப் பற்றிய உணர்வு அறிவு இருப்பதில்லை.மரம் எத்தன்மையது என்று பார்க்கும்போது,யானைக் காட்சி மறைந்து விடுகின்றது.அது போல்,பரத்தால் விளக்கம் பெற்ற பார் முதலிய பூதங்களைப் பார்க்கும் போது பரமானது உணர்வுக்கு வருவதில்லை.குருவருளால் பார்க்கும்போது பரமே காட்சி தந்து பார் முதலிய பூதங்கள் பரத்தில் மறைந்து விடும்.)

(பின் குறிப்பு:என் மற்ற பதிவில் 2007 ஆகஸ்ட் 7ஆம் தேதியிட்ட பதிவு,சிறிது விரிவாக்கப் பட்டு இங்கு இறக்குமதி செய்யப் பட்டிருக்கிறது.)

18 கருத்துகள்:

  1. இவ்ளோ நாளைக்கு பிறகு எனக்கு இப்ப தான் இந்த உண்மை தெரிந்தது. தகவலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி,சரவண குமார் அவர்களே.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி,ஹரிஸ்.

    பதிலளிநீக்கு
  4. திருமூலரின் பாடலுக்கு தாங்கள் தந்த பதவுரையும்,பொழிப்புரையும் மிக அருமை.
    விளக்கத்தை,ரசித்து,ருசித்தேன்!

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி,நடனசபாபதி அவர்களே.

    பதிலளிநீக்கு
  6. திருமந்திரத்துக்கு கதை மூலம் விளக்கம் அருமை

    பதிலளிநீக்கு
  7. திருமூலரின் பாடல் விளக்கம் மிக அருமை

    பதிலளிநீக்கு
  8. @சிவகுமாரன்
    @LK
    @பயணமும் எண்ணங்களும்
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. இந்தக் கருத்தை சினிமாப்பாட்டு வரை திருப்பிப் போட்டிருக்கோம்! இறை தத்துவத்துக்கு பொருந்தினாலும், எந்த மறை பொருளுக்கும் இது பொருந்தும். மரத்தைப் பார்த்தால் காடு தெரியாது, காட்டைப் பார்த்தால் மரம் தெரியாது - இது ஆங்கில மந்திரம்.. :)

    பதிலளிநீக்கு
  10. எல்லாமே நம் மன ஓட்டத்தை,நம் பார்வையைப் பொறுத்ததுதானே!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்பாதுரை அவர்களே.

    பதிலளிநீக்கு
  11. @!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர்
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சென்னை பித்தன் ஐயா அவர்களே,

    நிகழ்வுகள் - என்ன கொடுமை சாமி - என்னும் பதிவிற்கு தாங்கள் தந்த பதிலின் அடிப்படையில் இந்த கருத்து..


    இறைநம்பிக்கை உண்டு என்று சொன்னீர்களே அதற்கு முதற்கண் மகிழ்ச்சி..

    //”மரத்தை மறைத்தது”திரு மந்திரப்பாடலின் விளக்கம் இங்கே-
    http://chennaipithan.blogspot.com/2007/08/blog-post_2288.html//

    தங்கள் தளத்திற்கு சென்று வாசித்தேன்..

    எந்த ஒரு பாடலுக்கும் அவரவர் அறிவின் துணை கொண்டு விளக்கம் எழுதலாம்..

    திருக்குறளுக்கு உரை எழுதாதவர்கள் யார் ?

    நீங்களும் நானும் தான்..
    நீங்கள் எழுதியிருக்கிறீர்களோ என்னமோ ?
    நான் இன்னும் இதுவரை எழுதவில்லை..

    நாளை எழுதநேரிடலாம்...
    (ஹி..ஹி..ஹி )


    அதுபோல இந்த திருமந்திரத்திற்கு
    நீங்கள் அறிந்தவரை உரை எழுதியிருக்கிறீர்கள் அவ்வளவே..

    அதுமட்டுமல்ல.
    நீங்கள் தந்தது சொல்லுக்கு பொருளே
    தவிர

    அந்த சொற்களுக்குள் ஒளிந்திருக்கும உண்மைக்கு பொருள் அல்ல..

    அதாவது நீங்கள் உவமானத்திற்கு மட்டும் உங்கள் பதிவில் விளக்கம் தந்திருக்கிறீர்கள்..

    உவமானத்தால் சொல்ல வந்த , சொல்ல வேண்டிய விசயத்திற்கு விளக்கம் சொல்லாமல் போனால் எப்படி ?

    நான் சொன்னால் கூட தவறு என்பீர்கள் வாய்ப்பிருந்தால்,

    திருமந்திர விளக்கவுரை,
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகத்தாரால் வெளியிடப்பட்ட ( முதல் பதிப்பு - 1942 ) உரையை வாங்கிப் படியுங்கள்..

    உண்மை விளங்கும்..
    என் சொல்லில் உள்ள உண்மை விளங்கும்..

    யாருக்காகவும் எதற்காகவும்
    உண்மையை விட்டுத் தராதீர்கள்..

    அன்புடன் வணக்கம்..

    http://sivaayasivaa.blogspot.com

    பதிலளிநீக்கு
  13. @சிவ.சி.மா. ஜானகிராமன்
    முதற்கண், தங்கள் வருகைக்கு நன்றி!பாடலின் விளக்கம் இங்கே என்று நான் சுட்டி கொடுத்தது, உங்கள் கருத்தை மறுத்தோ,தவறு என்று சொல்லவோ அல்ல! ’இன்னொரு’ விளக்கம் என்று போட்டிருந்தால் தவறாகப் பட்டிருக்காது.மன்னிக்கவும்!
    நான் எழுதியது திருவாவடுதுறை ஆதீனத்தின் பஞ்சாக்ஷர தீப உரையை அடிப்படையாககொண்டே!
    நான் பெரிய தமிழ் அறிஞனோ, ஆன்மீகச் செம்மலோ அல்ல.நான் படித்தவற்றைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கில்தான் இவையெல்லாம் எழுதுகிறேன்.
    எனது மற்றப் பதிவையும் பார்த்துக் கருத்துச் சொல்ல வேண்டுகிறேன்!
    "http://shravanan.blogspot.com"
    ஓம் நமச்சிவாய!

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ஐயா,

    ஆன்மீக வலைப்பக்கங்களே குறைவு..
    இதில் மிகவும் நுட்பமான திருமந்திரம்
    குறித்து தாங்கள் விளக்கியிருப்பது
    போற்றுதலுக்குரியது...

    ஆனால் நிகழ்வுகளால் ஒரு சிறிய
    குழப்பம் நம்முள் ஏற்பட்டது
    அவ்வளவே..

    இதுவும் நன்மைக்கே இதனால் தான் தங்களது வலைத்தளங்களில் இணையுவும் வாசிக்கவும் முடிந்தது

    திருவருளால்,
    இனி தொடர்நது வருகை தருவோம்

    நன்றி..
    ஓய்வில் எமது வலைப்பக்கமும் வாருங்கள் ஐயா..

    http://sivaayasivaa.blogspot.com

    நன்றி..

    பதிலளிநீக்கு
  15. சிவ.சி.மா. ஜானகிராமன்
    தங்கள் கருத்துக்கும், தொடரப் போகும் ஆதரவுக்கும் நன்றி!
    நானும் தொடர்வேன்,உங்கள் தளத்தை!

    பதிலளிநீக்கு