தொடரும் தோழர்கள்

வெள்ளி, டிசம்பர் 17, 2010

மார்கழிப் பொங்கல்-3(இசை விழா)

மார்கழி மாதம் என்றால் அதிகாலையில் கோவில் பூசைகளும்,பாசுர ஒலிகளும்,தவிர்க்கவே முடியாத பொங்கலும்(!),குளிரும் மட்டுமில்லை. சென்னையைப் பொறுத்த வரை டிசம்பர் இசைவிழாவும்தான்.நிறைய சபாக்கள் டிசம்பர் தொடக்கத்திலேயே இப்போதெல்லாம் நிகழ்ச்சிகளை ஆரம்பித்தாலும்,பழமையான பெரிய சபாக்களான மியூசிக் அகாடமி, நாரதகான சபா போன்றவை,டிசம்பர் 15 க்குத்தான் ஆரம்பிக்கின்றன தங்கள் விழாவை.

ஒரு காலத்தில் சில சபாக்களே இருந்த நிலை மாறி,இன்று நூற்றுக் கணக்கில் சபாக்கள் வந்துவிட்டன.இந்தப் பெருக்கம் சில வருந்தத்தக்க விளைவுகளையும் தோற்றுவித்திருக்கிறது.சில புதிய சபாக்கள்,வளரும் இளம் கலைஞர்களுக்கு,வாய்ப்பளிக்கப் பணம் கேட்டிருப்பதாக வரும் செய்திகள்.இது தொடரக்கூடாது.தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.இந்த ஆண்டு சில பெரிய பாடகர்கள் தங்கள் கச்சேரிகளைக் குறைத்துக் கொள்வதென முடிவு செய்திருக்கின்றனர் .இது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை.இதன் மூலம் பல வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும்.

ஒரு காலத்தில் சபாக்களில் தமிழ்ப்பாடல்கள் அதிகம் பாடப் படவில்லை.ஆனால் இப்போது நிறையத் தமிழ்ப்பாடல்களையும் கேட்க முடிகிறது.பாபனாசம் சிவன்,கோபாலகிருஷ்ண பாரதி ,பாரதியார், அருணசலக் கவிராயர்,பெரியசாமித்தூரன் ஆகியோரது பாடல்கள் பெரும்பாலும் பாடப் படுகின்றன.

இந்த இசை விழாவுக்காகவே,அநேக வெளிநாடு வாழ் தமிழர்கள் சென்னை வந்து பதினைந்து,இருபதுநாட்கள் தங்கி,எல்லா சபாக்களையும் ஒரு சுற்றுச் சுற்றி விட்டுச் செல்கின்றனர்.இரண்டு மாதங்களுக்கு முன்பே நியூ வுட்லாண்ட்ஸ்,மற்றும் மயிலை, ஆழ்வார்ப்பேட்டைப் பகுதிகளில் இருக்கும் சேவைக் குடியிருப்புகள் பதிவு செய்யப்பட்டு விடுகின்றன.

சில சபாக்களில் இருக்கும் உணவகங்களில் சபாக்களின் உள்ளே இருப்பதை விட அதிகமான கூட்டம் இருக்கிறது!விலையெல்லாம் அதிகமாக இருந்தாலும் யாரும் சாப்பிட யோசிப்பதில்லை.புது உணவு வகைகள் எல்லாம் கிடைப்பது ஒரு காரணமோ?

இன்று இப்பதிவு எழுதக் காரணம் நானும் ஜோதியில் கலந்து விட்டதுதான்!ஆம்;இரண்டு நாட்களாக நாரத கான சபா கச்சேரிக்குப் போக ஆரம்பித்து விட்டேன்.சீசன் டிக்கட்.அடுத்த ஆண்டு 2 ஆம் தேதி வரை தொடரும். காண்டீன்?!--ஒரு காப்பியோடு சரி (ரூபாய்.15/=)

பயப்படாதீர்கள்!கேட்ட கச்சேரிகளைப் பற்றியெல்லாம் எழுதி உங்களைப் போரடிக்க மாட்டேன்!

9 கருத்துகள்:

  1. மார்கழி ஸ்பெஷல்
    தொடருங்க அருமை

    பதிலளிநீக்கு
  2. பரவாயில்லை விமர்சனம் ஒன்று போடுங்க. படிக்க நான் இருக்கேன்

    பதிலளிநீக்கு
  3. @THOPPITHOPPI
    தொடர முயல்கிறேன்.வருகைக்கு நன்றி.
    @LK
    எனக்கு மிகவும் பிடித்த ஒரு கச்சேரிக்குக் கட்டாயம் விமர்சனம் எழுதி விடுகிறேன்.வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. சாபாவுக்கெல்லாம் போறீங்க. ரொம்பதான் கெட்டு போய்ட்டீங்க.

    பதிலளிநீக்கு
  5. @மோனிஷா
    ரொம்ப நாள் பழக்கங்க.இந்த வயசுக்கு மேல மாத்த முடியுமா?
    வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. // பயப்படாதீர்கள்!கேட்ட கச்சேரிகளைப் பற்றியெல்லாம் எழுதி உங்களைப் போரடிக்க மாட்டேன்!//

    என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள். தங்கள் பதிவைப்பார்த்ததும் 'இதோ இன்னொரு சுப்புடு கிளம்பிவிட்டார்' என நினைத்தேன். நினைப்பை பொய்யாக்கிவிட்டீர்களே!

    பதிலளிநீக்கு
  7. நான் சுப்புடுவா?! சான்ஸே இல்லை.அதற்கெல்லாம் அபார இசை ஞானம் வேண்டும்.
    வருகைக்கும் கருத்துக்கும்நன்றி நடனசபாபதி அவர்களே.

    பதிலளிநீக்கு
  8. தொலைத்த வரங்களில் இது ஒன்று. ரசித்த கச்சேரி ஒன்றைப் பற்றிப் பதிவு போடுங்களேன்?

    புறநகர்களில் சபாக்கள் உள்ளனவா? அல்லது சென்னைக்கு வர வேண்டுமா? இசைவிழாவை இன்னும் நடத்தி வருவது ஆச்சரியம் தான். மக்கள் ஆதரவு கொடுக்கிறார்களே?

    பதிலளிநீக்கு
  9. //தொலைத்த வரங்களில் இது ஒன்று. ரசித்த கச்சேரி ஒன்றைப் பற்றிப் பதிவு போடுங்களேன்?//
    இந்த வரம் எனக்குமே விருப்ப ஓய்வு பெற்று வந்தபின்தான் கிடைத்தது! ஒரு கச்சேரி பற்றியாவது நிச்சயம் எழுதுவேன்.

    இசைவிழாவுக்கு நிச்சயம் ஆதரவு உள்ளது என்பதை சபாக்களின் பெருக்கமே காட்டுகிறது.புற நகர் என்றால்?எனக்குத் தெரிந்து நங்கநல்லூரில் சபாக்கள் இருக்கின்றன.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்பாதுரை அவர்களே.

    பதிலளிநீக்கு