தொடரும் தோழர்கள்

சனி, டிசம்பர் 18, 2010

மார்கழிப் பொங்கல்-4-(கோலம்)

பொங்கலைத் தவிர மார்கழியின் மற்றோர் விசேஷம்-கோலம்.வீட்டு வாசலைத் தெளித்துப் பெருக்கி அழகான பெரிய பெரிய கோலங்களாக வரைந்து,நடுவில் ஒரு பூசணிப்பூவைச் சாணியில் செருகி வைத்த பின் அந்த வாசலே மிக அழகாகி விடும்.இன்று சென்னையில் குடியிருப்புகள் பெருகிப்போனபின்,பெரிய கோலங்கள் போட ஏது இடம்.?ஆயினும் மைலாப்பூர் மாதிரி சில இடங்களில்,சில வீடுகளில் இந்தப் பழக்கம் அழியாமல் காப்பாற்றுப்பட்டு வருகிறது.மைலாப்பூர் விழா நடக்கும்நேரத்தில்,மயிலையில் மாட வீதியில் கோலப் போட்டியே நடை பெறும்.அன்று அங்கு சென்று பார்க்க வேண்டும் அந்த அழகை!மாதிரிக்குச் சில கோலங்கள் கீழே--






மாக்கோலம்.விசேஷ நாள்களில் போடுவது.


புள்ளிக் கோலம்.வாசலில் போடும் கோலங்களில் ஒன்று








பூக்கோலம். ஓணத்தின்போது போடப்படுவது.




அந்த அதிகாலை நேரத்தில் குனிந்து நிமிர்ந்து அமர்ந்து,பெரிய கோலம் போடுவது பெண்களுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சியும் கூட!

இந்தக் கோலம் போடும் கலை மறைந்து வருகிறதோ என எண்ணுகிறேன்.

நான் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில்,காலையில் படிக்கும் சாக்கில்,சீக்கிரம் எழுந்து,கையில் புத்தகத்துடன் வீட்டு வாசலில் நின்று. அந்தத் தெருவில் எல்லா வீட்டு வாசல்களிலும் போடப்படும் கோலத்தை(கோலத்தை மட்டுமா!) ரசித்ததுண்டு.

இந்நேரம் ஒரு புதுக்கவிதை நினைவுக்கு வருகிறது.கவிதை வரிகளும் நினைவில்லை;எழுதியவர் பெயரும் நினைவில்லை.என் வார்த்தைகளிலேயே அதன் கருத்தைத் தருகிறேன் –

குனிந்து நிமிர்ந்து,பெருக்கிக்
கோலம் போட்டுப் போனாள்!
வாசல் சுத்தமாச்சு
மனசு குப்பையாச்சு!

15 கருத்துகள்:

  1. ஆகா. நானும் கோலம் பற்றி பதிவு போட்டிருக்கேன் சார்.
    நீங்க கல்லூரியில படிக்கும் போதுன்னா நாங்க ஸ்கூல்ல படிக்கிறப்பவே கோலத்தை ரசிக்கப் போவதுண்டு (கோலத்தை மட்டுந்தான்!!) ..அப்புறம் அந்த கவிதை மு.மேத்தா அவர்களுடையது.

    பதிலளிநீக்கு
  2. மார்கழிப் பொங்கல் பதிவுகள் அனைத்துமே அருமை . சபாக்களில் வெளியே சிற்றுண்டி உண்ணும் சுகமே தனிதான் . விலைவாசி காரணம் காபி மட்டும் தான் அருந்தமுடியும் என்பது வேதனைதான் . பாராளுமன்றத்தில் உள்ளது போல் இங்கும் குறைந்த விலையில் கிடைக்க (குறுகிய காலம் தானே ) வழி செய்தால் நன்றாக இருக்குமே என நான் எண்ணுவது உண்டு ! கோலங்கள் பற்றிய பதிவு வெளிப்படை ! மனது குப்பையானது மட்டுமல்லாமல் பல கோலங்கள் மனதில் விழுவதும் இயற்கையே ! அழிந்து வரும் ஒரு பண்பாட்டை நாம் மறந்து விடாமல் இருக்க ஆங்காங்கே அவ்வப்போது கோல போட்டிகள் நடப்பது ஒரு ஆறுதல் .
    வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  3. @சிவகுமாரன்
    //ஆகா. நானும் கோலம் பற்றி பதிவு போட்டிருக்கேன் சார். //
    great men think alike!
    //நீங்க கல்லூரியில படிக்கும் போதுன்னா நாங்க ஸ்கூல்ல படிக்கிறப்பவே கோலத்தை ரசிக்கப் போவதுண்டு (கோலத்தை மட்டுந்தான்!!)//
    அந்தந்த வயதுக்கேற்ற ரசனைகள்!
    //அந்த கவிதை மு.மேத்தா அவர்களுடையது.//
    தகவலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. @Vasu
    //பாராளுமன்றத்தில் உள்ளது போல் இங்கும் குறைந்த விலையில் கிடைக்க (குறுகிய காலம் தானே ) வழி செய்தால் நன்றாக இருக்குமே என நான் எண்ணுவது உண்டு !//
    ஆகா!அப்படி நடந்தால் இசைவிழா முழுவதும் ,காலை முதல் இரவு வரை சபாவிலேயே கழித்துவிட மாட்டேனா,செவிக்குணவு இல்லாத போது நிறைய வயிற்றுக்கும் ஈந்துகொண்டு(அல்லது மாற்றி!)
    //மனது குப்பையானது மட்டுமல்லாமல் பல கோலங்கள் மனதில் விழுவதும் இயற்கையே !//
    உண்மை.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  5. நீஙகள் மாக்கோலத்தைப் பற்றி பதிவு போட்டிருக்கிறீர்கள்.. சிவகுமராரன் மயில் கோலத்தைப் பற்றி பதிவு போட்டு இருக்கிறார். இரண்டும் இரண்டு வகையாக இருந்தாலும் இரண்டுமே அழகு...
    கோலம் மிகவும் அழகு சென்னைப் பித்தன்.

    என் வலைப்பூவின் வலம் வந்தமைக்கு மிக்க நன்றி சென்னைப் பித்தன்.

    பதிலளிநீக்கு
  6. கோலத்தை(கோலத்தை மட்டுமா!) ரசித்ததுண்டு.//
    அதானே பார்த்தேன் கல்லூரி பருவதில் ரசிக்கும் (அலங்)கோலம் இதுவல்லவே.

    பதிலளிநீக்கு
  7. //பெரிய பெரிய கோலங்களாக வரைந்து,நடுவில் ஒரு பூசணிப்பூவைச் சாணியில் செருகி வைத்த பின் அந்த வாசலே மிக அழகாகி விடும்.//

    அது பூசணிப்பூவல்ல. பரங்கிப்பூ.(Pumpkin Flower) அப்படி மார்கழி மாதம் தினம் வைத்த பரங்கிபூக்களை, தினம் அந்த சாணியில் வைத்து விரட்டி தட்டி காயவைத்து,அந்த விரட்டிகளை தைப்பொங்கல் அன்று பொங்கலிட,எரிபொருளாக உபயோகிப்பது வழக்கம். ம்! அந்த பழக்க வழக்கங்கள் மறைந்து போனது வருத்தமே. தாங்கள் அந்த நினைவுகளை கொண்டுவந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதிரா.உங்கள் பார்வைகள்,பக்கங்கள் இரண்டுமே சிறப்பாக உள்ளன. அவற்றை வலம் வந்ததற்கு நன்றி வேறா?!

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதிரா.உங்கள் பார்வைகள்,பக்கங்கள் இரண்டுமே சிறப்பாக உள்ளன. அவற்றை வலம் வந்ததற்கு நன்றி வேறா?!

    பதிலளிநீக்கு
  10. வயதைப் பொறுத்து ரசனை மாறும்,இனியவன்.அந்தப் பருவத்தில்,கோலமும்,போடும் கரங்களும்,இரண்டுமே ரசிக்க வைத்தவைதானே!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  11. @வே.நடனசபாபதி
    //அது பூசணிப்பூவல்ல. பரங்கிப்பூ.(Pumpkin Flower)//
    அதுதான் அய்யா ஒரு சாமானியனுக்கும்,வல்லுநருக்கும் உள்ள வேறுபாடு! திருத்தியதற்கு நன்றி.
    //அந்த பழக்க வழக்கங்கள் மறைந்து போனது வருத்தமே.//
    உண்மைதான்.ஆனால் இன்றைய நகரவாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியமில்லையே?
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. ரசித்துப் படித்தேன்.


    கோலம் போடுவதைப் பார்க்க வருகிறோம் என்று தெரிந்து கோலம் போட வந்தவர்களையும் தெரியும் :) காவல் காத்த எல்லைத் தெய்வங்களுக்குப் பயந்து தள்ளி நின்று கோலம் ரசித்த நாட்கள் நினைவுக்கு வந்தன.

    பதிலளிநீக்கு
  13. //கோலம் போடுவதைப் பார்க்க வருகிறோம் என்று தெரிந்து கோலம் போட வந்தவர்களையும் தெரியும் :) காவல் காத்த எல்லைத் தெய்வங்களுக்குப் பயந்து தள்ளி நின்று கோலம் ரசித்த நாட்கள் நினைவுக்கு வந்தன.//
    மலரும் நினைவுகள்!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்பாதுரை அவர்களே.

    பதிலளிநீக்கு
  14. கோலம் என் மனதை கொள்ளை கொண்ட காலம் அக்காலம், இக்காலம், எக்காலமும். வாழிய கோலம் பற்றிய கட்டுரைகள்

    பதிலளிநீக்கு
  15. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மீனா அவர்களே!

    பதிலளிநீக்கு