தொடரும் தோழர்கள்

புதன், டிசம்பர் 01, 2010

காதல்-திருக்குறள் கதை-நிறைவுப் பகுதி

அவர்கள் இருவரும் கைகோத்தபடி,ஹாலுக்குள் நுழைந்தனர். அவனுக்கும் ஓவியத்தில் விருப்பமும் சிறிது புரிதலும் இருந்தாலும்,அவள் ஒவ்வொரு ஒவியத்தின் முன் நின்று அதை விமரிசித்த பாங்கைக் கண்டு வியந்தான்.ஒரு ஓவியத்தின் முன் நின்று”வாவ்,இளங்கோவின் ஒவியம்;வண்ணங்களை அவர் கையாளும் விதத்தை பாருங்கள் அச்வின்!” என்று வியந்து பாராட்டும்போதே அருகில் வந்து நின்ற மனிதர் அவளைப் பார்த்து”ஹலோ காயத்ரி” என்றழைக்க,”மிஸ்டர் இளங்கோ!எப்படியிருக்கீங்க.! இவர் என் நண்பர் அச்வின் குமார்—அச்வின்,மிஸ்டர் இளங்கோ” என்று அறிமுகம் செய்து வைத்து விட்டு,”இப்போதுதான் உங்கள் ஒவியத்தின் சிறப்புப் பற்றி அச்வினிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்”என்றாள்.

”ஹலோ” என்றவாறு கைகுலுக்கிய அவர் காயத்ரியிடம் சொன்னார்”இன்றுதான் உங்களை ஒரு கண்காட்சியில், தனியாகவின்றி, ஒரு துணையுடன் பார்க்கிறேன்..மிக விசேஷமான நண்பர் என நினைக்கிறேன்”காயத்ரியின் கன்னம் வெட்கத்தால் சிவந்தது போல் குமாருக்குத் தோன்றியது.ஒவியங்களை ரசியுங்கள் என்று சொல்லி அவர் சென்று விட்டார்.

அவர்கள் கண்காட்சியை முழுதும் இரு முறை சுற்றி வந்தனர்.வெளியே வந்து மதிய உணவு அருந்தினர்.அப்போது அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
”நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக்
குறுமுறுவல் பதித முகம்
தரளம் மிடைந்து ஒளி தவழக் குடைந்து இரு
பவளம் பதித இதழ் ”
என்ற நா.பா.வின் வரிகள் மனதில் ஓடின.
அவளது அழகு அவனைப் பேச்சற்றவனாக ஆக்கியது.அதே நேரம் ஒரு பெண் அவர்களைகடந்து செல்லும்போது அவனைப் பார்த்துக் கொண்டே சென்றாள்.காயத்ரி சிறிது பொய்க்கோபத்துடன் கேட்டாள்”என்ன, அவளைப் பார்த்ததும் பேச்சே வரவில்லையோ?’

” நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று ”

(அவளுடைய அழகை நினைத்து அமைதியாக இருந்துநோகினாலும்,யாரை நினத்து ஒப்புமையாக என்னைப் பார்க்கிறீர் என்று சினம் கொள்வாள்). அவளிடம் கெஞ்சி,கொஞ்சி, தணிந்து, பணிந்து அவளது ஊடலை நீக்க வேண்டியதாயிற்று.


இப்படியாக அவர்கள் காதல் வளர்ந்தது.ஒரு கட்டத்தில் இனி திருமணத்தை தள்ளிப் போடக் கூடாது என்று முடிவு செய்தவர்கள் அதற்கான முயற்சியில் இறங்கினர்.எந்த வித எதிர்ப்பும் இடையூறுமின்றி திருமணம் நடந்தேறியது.

முதல் இரவு—
அத்தனை நாட்கள் வெறும் கைகளின் தொடுகையில் மட்டுமே இருந்த அவர்களுக்கு உரிமம் வழங்கப் பட்டு விட்டது.
அவ்ர்கள் தழுவிக் கொண்டனர்.ஒருவருக்குள் ஒருவர் புதைந்து போக வேண்டும் என நினைப்பது போன்ற ஒரு தழுவல்.இதய உணர்வுகளுக்கு வடிகாலே போன்ற தழுவல்.அதில் வெறும் காமம் இல்லை.அளவற்ற காதல் இருந்தது.

“வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.”
(காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல்,ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவர்க்கும் இனிமை உடையதாகும்)

அவள் முகத்தை அவன் முகம் நெருங்கியது.இதழ்களை இதழ்கள் நெருங்கின.

“ஆரஞ்சுத் தேன்சுளையா !
அங்கென்ன தத்தையொன்று
கூரலகால் கொத்திவந்த
கோவையா- யார்தான்
பவளத்தைக் கீறிவைத்தார்
பார்ப்போம் ! அடடா
அவளின் இதழா
அவை.
(நன்றி,சிவகுமாரன்)

கவிதையான
உன்னுதட்டில்
பொருள் தேடிக்குனிந்தேன் !
அர்த்தங்களை மறந்துவிட்டு
இப்போது
தேடுதலிலேயே
லயித்து விட்டேன் !(நன்றி,இனியவன்)

இணைந்தன...

“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.”
(மென்மையான மொழிளைப் பேசுகின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர்,பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.)

இனி அங்கு இருப்பது நாகரிகமில்லை.
அவர்கள் இனிதே வாழ வாழ்த்தி விடை பெறுவோம்.

10 கருத்துகள்:

  1. கலக்கலா இருக்கு..அடுத்து என்ன கதை?

    பதிலளிநீக்கு
  2. ஆகா..பின்னுற்றீங்களே..

    கடைசியா சொன்ன குறள்..ம்ம்ம்ம்...

    தொடருங்கள்..

    பதிலளிநீக்கு
  3. மணமக்களுக்கு வாழ்ததுக்கள்

    திருக்கறள் கருத்துக்களை மிக ரசித்தேன்

    அருமை

    பதிலளிநீக்கு
  4. என்ன எழுதலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன்.நன்றி சதீஷ்குமார்

    குறள் இனிக்கிறதா?!நன்றி ஹரிஸ்.

    உங்கள் வாழ்த்துகளை அவர்களுக்குத் தெரியப் படுத்திவிட்டேன்.நன்றி VELU.G. அவர்களே.

    பதிலளிநீக்கு
  5. மிக அருமையான காதல்
    கா(ஒ)வியம். சரியான குறட்பாக்களையும், மற்ற பாடல்களையும் மேற்கோள் காட்டி அழகாக கொண்டு சென்று இருக்கின்றீர்கள். தாங்கள் இன்பத்துப்பாலிலிருந்து 1314,1316 ,1317, மற்றும் 1318 குறட்பாக்களையும் மேற்கோள் காண்பித்து எழுதுவீர்கள் என எண்ணியிருந்தேன். அதற்குள் முடித்துவிட்டீர்கள். பரவாயில்லை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. அய்யோ!என் மனதில் நான் எண்ணியிருந்ததை அப்படியே சொல்லி விட்டீர்கள்!புலவி நுணுக்கம் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்றுதான் எண்ணியிருந்தேன். கதையோட்டத்தைக்கூட யோசித்து வைத்திருந்தேன். ஆனால் மிகவும் நீண்டு விடுமோ என்று தவிர்த்து விட்டேன்.
    மிக்க நன்றி நடனசபாபதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. அஸ்வின் குமாருக்கும் காயத்ரிக்கும் எங்கள் வாழ்த்துக்கள் ! மிகவும் இனிமையான கதை ! எப்போது முடியும் என்று எண்ண வைக்காமல் ஏன் இப்போதே முடிந்தது என்று எண்ண வைத்தது தான் ஆசிரியரின் சாதுர்யம் . இந்த கதையை தொடரலாமே ( sequel) வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  8. @ Vasu
    //இந்த கதையை தொடரலாமே (sequel)//
    அப்படி ஒரு எண்ணம் எனக்கும் இருக்கிறது.இன்பத்தை முடித்து விட்டேன்.இனி அறம்,பொருள் அடிப்படையில் எழுதலாம் என எண்ணம்.இறைவன் அருள் இருந்தால் நடக்கும்.’இன்ஷா அல்லா’!
    வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி,வாசு.

    பதிலளிநீக்கு
  9. முதலிலிருந்து படிக்கணும் சார் - ஆசையைத் தூண்டி விட்டது.

    பதிலளிநீக்கு
  10. முழுவதும் படித்து விட்டுப் பின் உங்கள் கருத்தை கூறுங்கள்-காத்திருக்கிறேன்.
    நன்றி அப்பாதுரை அவர்களே.

    பதிலளிநீக்கு