தொடரும் தோழர்கள்

திங்கள், நவம்பர் 16, 2015

இயக்குனர் திலகத்தின் “என்னதான் முடிவு”






2014 ஆம் வருடத்திய என் பதிவொன்றில் நான் குறிப்பிட்டிருந்தேன்//தமிழ்ப் படங்கள் பற்றிய தன் கட்டுரையில், ஜெயகாந்தன் அவர்கள் முன்பு ஒரு முறை குறிப்பிட்டார் "என்னதான் முடிவு பார்த்தபோது ஏது இவர் கூட(கே.எஸ்.ஜி) உருப்பட்டு விடுவார் போலிருக்கிறதே என்று நினைத்தேன்.ஆனால் அந்த நம்பிக்கை சித்தி வந்தபின் தகர்ந்து விட்டது"என்று.//

ஆனால் சித்தியோ,பணமா பாசமாவோ,கற்பகமோ, பற்றி அறிந்த அளவு நம் மக்கள் என்னதான் முடிவு பற்றி அறிந்திருப்பார்கள என்பது சந்தேகமே .
இப்படம் பற்றி பார்த்தசாரதி என்ன சொல்கிறார்..............
 ................
என்ன தான் முடிவு 1965ஆம் ஆண்டு மவுண்ட் ரோட் கெயிட்டி திரையரங்கத்தில் வெளி ஆனது. மகரிஷியின் மூலக்கதைக்கு கேஎஸ்ஜி திரைக்கதை வசனம் டைரக்‌ஷன். கற்பகம், கை கொடுத்ததெய்வம், பின் அக்கால பரீட்சார்த்த படம் என்னதான் முடிவு வெளியானது.

இது முழுக்க முழுக்க T.S.பாலையா படம் .காதலிக்க நேரமில்லை-விஸ்வநாதன், என்ன தான் முடிவு கருணாகரன், திருவிளையாடல்-ஹேமநாத பாகவதர், பாலையாவின் வெவ்வேறு பரிமாணங்கள்.

குமரன் (மாஸ்டர் ஸ்ரீதர்) ஏழை அண்ணன் கொத்தனார் (வி.எஸ்.ராகவன்) குடிசையில் தங்கையுடன் உண்மையே சத்தியம் என்ற உத்வேகத்துடன் வளருகிறார். சிறு தவறுகளை செய்து ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லாத பொய்க்காக தண்டிக்கப்படுகிறார். வீட்டை விட்டு ஒடி மலை உச்சியில் மறைகிறார்.

அடுத்த ஷாட்டில் திருட்டு ரயில் ஏறி குடிகார சீமான் V.K.ராமசாமியுடன் திருச்சிக்கு வந்து அவர் உள்ளத்திலும் பின் பங்களாவிலும், அந்தரங்க காரியதரிசியாகக் குடிபுகுகிறார். குமரனின் வருகை மானேஜர் கருணாகரனின் (பாலையா) சொத்தைப் பறிக்கும் திட்டத்திற்கு ஒரு முட்டுக்கட்டை ஆகிறது. வி.கே.ராமசாமி குடிப்பதை குறைத்தால் தான் அவர் உயிர் வாழ முடியும் என்று குடும்ப டாக்டர் கூற, குமரன் தினமும் அடிவாங்கி குடியைக் குறைத்து, அடி வாங்கிக் கொண்டே AVM.ராஜன் ஆகிறார்.

வி.கே.ராமசாமிக்கு மரணபயம் அதிகரிக்க வக்கீலைக் கூப்பிட்டு உயில் எழுதுகிறார். பாலையாவின் ஏமாற்றம் கோபமாக மாறி, கொலை வெறியால் ஆக்ரமிக்கப்படுகிறார். வி.கே. ராமசாமிக்கு பரமபத ப்ராப்தி கொடுத்து, திட்டமிட்டு, பழியை ராஜன் மீது போட்டு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுக்கிறார்.

பாலையா மனைவியையும் மகளையும் அழைத்துக் கொண்டு சொந்த ஊரில் நான்கு நாட்கள் தலைமறைவாக இருக்கும் பொருட்டு காரில் செல்லும் போது அவரது கவனக்குறைவால் விபத்து நேரிட, பாவம் செய்த பாலையா பிழைத்து விடுகிறார். பாவம் செய்யாத அதற்கு துணையும் போகாத மனைவி, மகள் விபத்து நடந்த இடத்திலேயே, (முன்பு சிறுவன் குமரன் மலையில் ஏறி காட்சிக்கப்பால் செல்லும் இடம்) உயிர் விடுகின்றனர். உயிர் பிழைத்த பாலையா, குற்ற உணர்வில் சிக்கித் தவிக்கிறார், துடிக்கிறார். கதறி அழுகிறார். அப்பப்பா என்ன நடிப்பு கொஞ்சம் கூட மிகையில்லை.

பாலையாவை காப்பாற்றுபவர்கள் குமரனின் குடும்பத்தை சேர்ந்த ஏழை வி.எஸ்.ராகவன் மற்றும் அவர் தங்கை வசந்தி, B.A., (தேன்நிலவின் தேய்பிறை). பாலையா எடுக்கும் வாந்தியை கையால் பிடிக்கிறார் வசந்தி .மறுவாழ்வு தந்த வசந்தியை மகளாக ஏற்கிறார்.

V.K.ராமசாமியின் உயில் விபரங்களை அவரது வக்கீல் பாலையாவை தேடிப் பிடித்து விளக்குகிறார். வெந்த புண்ணில் வேல், சொத்து முழுவதும் பாலைய்யாவுக்கே, குமரனுக்கு ரூ.2இலட்சம் மட்டுமே. (இப்படிப்பட்ட உயிலுக்கான தடயங்கள், முற்பகுதியில் முழுவதுமாக கருணாகரனால் அறிய முடியாமல் மறைக்கப்பட்டது படத்தின் பெரிய ஓட்டை)

இப்போது கருணாகரனின் கருணை, பிரவாகமாக கரை புரண்டு ஒடுகிறது. வி.எஸ்.ராகவனின் அந்தஸ்தை உயர்த்தி அஞ்சலி தேவிக்கு மணம் முடிக்கிறார். அவர்களுடன் பங்களாவில் குடியேற்றுகிறார். முதல் வேண்டுவோர்க்கு பண உதவி செய்து, அறிவுரை கொடுத்து முன்னேற வழி வகுக்கிறார். நாவிதனை முதலாளி ஆக்கி, வேண்டியவர்ககு கல்வி தந்து, நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுத்து மானுட தெய்வம் ஆகிறார்.சிறையில் செய்யாத குற்றத்துக்காக தண்டனை அனுபவித்து வரும் ராஜனின் பழி வாங்கும் உணர்ச்சி விஸ்வரூபம் எடுக்கிறது. நன் நடத்தைக்காக தண்டனை குறைக்கப்பட்டு 10 ஆண்டுகளில் விடுவிக்கப்படுகிறார். குடும்பத்துடன் சேருகிறார் விஜயநிர்மலா காளையைப் பற்றி பாடி ராஜனை ஒரு தலையாக காதலிக்க ஆரம்பிக்கிறார்.

ராஜனின் விடுதலையின் போது பாலைய்யா ஷேத்ராடனம் சென்றிருக்கிறார். கங்கையில் மூழ்கி பாவத்தை தொலைக்க திக்குமுக்காடுகிறார்.பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே, செய்த பாவம் முழுதும் தீரும் வரை இறக்க விடாதேமாயவநாதன் பாடல், TMS குரலில் சுதர்ஸனம் இசையில் பாலையாவின் பாவமன்னிப்பு கோரி கதறும் நடிப்பில், ரசிகர்களை பரவசப் படுத்து கிறார்.

வசந்தியின் திருமணம் பாலையாவின் ஆசியுடன் (போனில்) நிச்சயிக்கப்படுகிறது. மணநாள் காலை, ஊர் திரும்பி, திருமணத்தை நடத்திக் கொடுப்பதாக வாக்களிக்கிறார்.

இதற்கிடையே அண்ணி அஞ்சலிதேவி, ஐயா பாலையாவின் ஒப்பற்ற தர்ம காரியங்களை ராஜனுக்கு உணர வைத்து, அவரை மென்மையாக்க முயற்சிக்கிறார். ஆனால் ராஜனின் கோபம் பாலைய்யா செய்த பச்சை துரோகத்தின் மறுவினை ஆயிற்றே.

திருமண பந்தலில் அண்ணன் ராஜன் ஜெயில் தண்டனை அடைந்த கொலைகாரன் என்ற உண்மை வெளியாகிறது.  கையில் கத்தி, இரவு வண்டியில் திருச்சிக்கு டிக்கெட் சகிதம் பிடுபடுகிறார்.

அதாவது தாலி கட்டியானவுடன் கருணாகரனைத் தேடி பழிவாங்க செல்வதற்கு தயார் நிலையில் இருக்கிறார். கல்யாணத்தில் கொந்தளிப்பு. அப்போதும் ஐயா தான் கருணாகரன் என்ற உண்மை ராஜனுக்கு தெரியாது.

இந்த சூழலில் திருமண மண்டபத்தில் பாலையா பிரவேசிக்கிறார்.

ஐயா, நீங்கள் தான் கல்யாணத்தை நடக்கவைத்து, என் தங்கைக்கு வாழ்வளிக்க வேண்டும் என வி.எஸ். ராகவன் மனைவியுடன் காலில் விழ, வசந்தி கதறி அழ பாலைய்யா எந்த பரபரப்பும் இல்லாமல் அங்கு சந்திக்கும் ராஜனை நோக்கி கருணையே வடிவாக நடந்து செல்வார். என்ன நடை!

குமரா, இதோ மானேஜர் கருணாகரன் வந்திருக்கேன்.முதலாளிக்கு விஷம் கொடுத்து கொன்னுட்டு, பழிய உன்மேலே போட்டு ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு சொத்தை யெல்லாம் சுருட்ட நினைத்த பாவி”. “உன் கையாலே சாகணும்னு தான் இவ்வளவு நாளா காத்திருக்கேன்.அப்பதான் என் பாவம் எல்லாம் ஒழியும். என்னை என்ன வேணும் பண்ணிக்கோஎன்று ராஜனிடம் சரணடைவார்.

நூறுக்கும் மேற்பட்ட பாலையாவின் அன்பர்கள் ஊர் திரும்பிய ஐயாவின் தரிசனத் திற்காக கல்யாண மண்டபத்தில் கூடியிருப்பார்கள்.

AVM ராஜன் கத்தியுடன் பாலைய்யாவை இழுத்துக் கொண்டு ஒர் அறையில் சென்று கதவை தாழ் போட்டுக் கொள்கிறார்.

சிறிது நேரத்தில் கொத்தனார் V.S.ராகவன் கதவை கடப்பாரையால் பிளக்க உள்ளே பரவியுள்ள ஒளியில்பாலைய்யா காலில் ஏ.வி.எம். ராஜன் விழுந்து கதறி அழுது கொண்டிருப்பார். வைஷ்ணவ ஜனதோபின்னணியில் அழகாக ஒலிக்கும். பாலைய்யா ராஜனை தொட்டுத் தூக்கி அணைத்துக் கொள்வார்.


பின்னணியில் ஒரு குரல் கருணையுடன் ஒலிக்கும்மனிதன் மனிதனாக இருக்கும் போது தவறு செய்வதில்லைமிருகமாகும் போது தவறு செய்கிறான்.வருந்தி திருந்தும் போது தெய்வத்தன்மை அடைகிறான்.தெய்வத்தன்மை அடையும் போது வாழத் தானே வேண்டும்.

முடிவில் படம் பார்க்கும் சிலருக்கு, ராஜன் ஏன் ஐயாவின் காலில் விழ வேண்டும் என்ற ஐயம் எழுகிறது. கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன் வந்த படத்தை விமர்சிப்பது சரியல்ல.

ராஜ் டி.வி. இந்தப் படத்தின் Rightsக்கு சொந்தம். மனம் வைத்தால் Prime Time-ல் ஒளிபரப்பி ரசிகர்களை பரவசப்படுத்தலாம். DVD-யின் கண்டிப்பாக படத்தை பார்க்கலாம். (தரமான படத்தை பார்க்க விரும்பினால்.)............ 
...............


இயக்குனர் திலகத்துக்கு அஞ்சலிகள்!


இந்தக் காணொளியை முதலில் இணைக்க மறந்து விட்டேன்....

 



11 கருத்துகள்:

  1. பார்க்கத் தவறிய ஒரு அருமையான திரைப்படத்தின் கதையை சுருக்கி வெளியிட்டு அதை பார்க்கும் ஆவலைத்தூண்டிவிட்ட நண்பர் திரு பார்த்தசாரதி அவர்கட்கும்,அவரது எழுத்தை வெளியிட்ட தங்களுக்கும் நன்றி! இயக்குனர் திலகம் திரு K.S.கோபாலகிருஷ்ணன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளியை இணைத்து திரு பாலையாவின் நடிப்பை இரசிக்க உதவியமைக்கு நன்றி!

      நீக்கு
  2. “வைஷ்ணவ ஜனதோ” பின்னணி மனதை நெகிழ வைத்து விடும் ஐயா...

    பதிலளிநீக்கு
  3. இந்தப் படத்தை சில காட்சிகள் குறிப்பாக கடைசிக்காட்சி டீவியில் பார்த்த நினைவு இருக்கிறது! அந்தகாலத்தில் எடுக்க பட்ட புரட்சிகரமான படமாகத்தான் தோன்றுகிறது! சுருக்கமான கதைப்பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. அலசிய விதம் நன்று ஐயா காணொளி கண்டேன்

    பதிலளிநீக்கு
  5. இந்தப் படத்தின் சில காட்சிகள் பார்த்த நினைவு இருக்கின்றது ஆனால் படத்தின் பெயர் நீங்கள் இப்போது சொல்லித்தான் நினைவுக்கு வருகின்றது....மற்றும் காணொளி பார்த்ததும்....

    கதைப்பகிர்வுக்கு மிக்க நன்றி. ..தொலைக்காட்சியில் வந்தால் முழுப்படமும் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவு சார். காணொளியும் அருமை.

    பதிலளிநீக்கு
  7. அன்றைய நாட்களில் வானொலி ஒன்றே பாடல் கேட்க உதவுவது, இன்ன பாடல் இன்ன படம் எனும் தகவலும் தருவது, நீங்கள் இட்ட பாடலின் வரிகள், இசை இப்படத்தைப் பார்க்க வேண்டுமென ஆவலைத் தூண்டியது.
    இன்றுபோலா!, பொறுத்திருந்த போது, யாழ்பாணம் திரையரங்குகளில் அன்று (1970) இரண்டு புதிய படங்களுக்கு இடையில் சில தினங்கள் பழைய படங்களைத் திரையிடும் வழக்கம் இருந்தது. அப்போது இந்தப் படத்தை நான் பார்த்துள்ளேன்.
    இப்பாடலின் வரியில் " வஞ்சகரின் உடலெங்கும் வாதம் வரவேண்டாமோ?, வாய் நிறைந்த பொய்யனுக்குச் சூலம் வரவேண்டாமோ?- எனும் வரியில் வரும் சூல நோய் என்பது புரியாமல், ஒரு உறவு ஆயுள்வேத வைத்தியர்- அது குடற்புண் - என்றார். அப்பர் பெருமான் அல்லலுற்றதும் இந்நோய்க்கே என விளக்கினார்.
    அருமையான அன்றைய படம். கே எஸ் கோபாலகிருஸ்ணனுக்கு இலங்கையிலும் நிறைந்த ரசிகர்கள் இருந்தார்கள். மறக்க முடியாத படம். பாலையாவின் சிறந்த நடிப்புக்குரிய படம்.

    பதிலளிநீக்கு
  8. Mr. KSG அவர்கள் பற்றிய அருமையானதோர் அலசல்.

    இயக்குனர் திலகத்துக்கு என் அஞ்சலிகள்!

    ”பணமா பாசமா” நான் அந்தக்காலத்தில் பலமுறை பார்த்து வியந்ததோர் மிக நல்ல படம்.

    பகிர்வுக்கு நன்றிகள், சார்.

    பதிலளிநீக்கு
  9. அருமையான ஒரு படம் பற்றி உங்கள் பதிவில் படித்து ரசித்தேன். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு